UP | HOME

செய்யறிவுக் கலைச்சொற்கள் 2025

இந்த சொற்களை முகநூலில் பதிவிட்ட போது சில விளக்கங்களைச் (என் எண்ணங்களைச்) சேர்க்காமல் விட்டு விட்டேன்.

இவை மூன்றும் முன்னமே இட்டது

  • Artificial Intelligence = செய்யறிவு
  • Artificial General Intelligence = செய்சாலறிவு
  • Artificial Super Intelligence = செய்வியனறிவு

Computing Power = கணியப்புயவு

Blind Brilliance = குருட்டுப்பொலிவு

Collaborative Intelligence = கூட்டறிவு

Rule Book = விதி-ஏடு

நூல் என்ற பொருளில் இதைப் பயன்படுத்துவது இல்லை. ஒரு கையேடு போல இந்த விதிகள் உதவுவதால் ஏடு என்ற சொல் பொருந்தும் எனக் கருதுகிறேன்

Expert Systems = வல்லமைத் தொகுதிகள்

நேரடிப் பெயர்ப்பாக இல்லாமல், வல்லமைத் தொகுதிகள் என சொல்லக்காரணம், பல வல்லுநர்களின் அறிவை அனுபவத்தை விதி வடிவில், ஒரு நிரல் அதே அளவிலான வல்லமையோடு இயங்க ஏதுவாக இந்த அனுபவத்தொகுதிகளை பயனுற்றுத்திக்கொள்ளும் வகையில் தரவமைக்க பட்டிருப்பவைதான் இந்த Experts systems. ஆகையால் வல்லமைகளின் தொகுதிகள் என அந்த நிரலுக்கு ஆகுபெயராக பயிலலாம்.

Domain-Specific Knowledge = கொற்றம் குறித்த ஞானம்

Space, field, முதலியவற்றோடு குழப்பாமல் domain என்பதை சரியாக பொருள்காட்டும் சொல் கொற்றம் (எடு. kingdom, earldom).

Anthropomorphic Bias = மாந்தவியல்பேற்றச் சாய்வு

தற்குறிப்பேற்ற அணி போல மாந்த இயல்புகளை ஏற்றுவதால் சார்பு - reliance, சாய்வு - bias என கொள்கிறேன்.

Combinatorial Explosion = சேர்மானக் கடுவளர்ச்சி

பலர் இதை சேர்மான பெருவெடிப்பு என எழுதியுள்ளனர். தனிதனி உறுப்படிகள் சேரும் விதங்களையும், சேர்க்கப்படும் எண்ணிக்கையும் பொருத்து கிடைக்கப்பெருபனவற்றின் எண்ணிக்கை மலமலவென வளர்வதை குறிக்கிறது. ஆகவே வளர்ச்சி என்ற சொல் பொருத்தமாகப் படுகிறது.

Failure to Scale = அளாவுதல்-தோல்வி

Scaling - வளர்ச்சிக்கேற்ப வளைந்து கொடுப்பது என்ற பொருளில் தான் கணிய புலத்தில் புழங்குவதால், வளச்சியின் அளவிற்கேற்ப அளாவுதல் நன்று. இல்லையென்றால் அளாவுதற்றொல்வி என போக வேண்டியதுதான்.

Problem

  • Traveling Salesman Problem = ஊரோடி வணிகர் கடும்புதிர்

எல்லா Problemமும் சிக்கல்களில்லை. போட்டிகளில் கொடுக்கப்படும் “Problem statement”ஐ புதிர்(திர்க்க முனையும் சிக்கல்) விளக்கம் எனலாம். கீழ்வரும் இரண்டிலும் Problem என்ற சொல் அதன் வீச்சிற்கும், விளைவுக்கும் எற்ப இடர் (இடர்பாடாகக் கருதுகிறோம்), சிக்கல்(தீர்த்தே ஆகவேண்டிய புதிர்)

  • The Control Problem = கட்டுப்பாட்டு இடர்
  • The Value Alignment Problem = விழுமியவிணைப்பொருமைச் சிக்கல்

AI Hallucinations = செய்யறிவின் பிதற்றல்கள்

Hallucination என்பது மனத்துள் ஏற்படும் மயக்கம் (குழப்பம்) என்பது உளவியல் கலைச்சொல். AI hallucincates என்று சொல்லும் போது அது பெரும்பாலும் பெரும் மொழிமாதிரிகள் (Large Language Models) எழுதி, வரைந்து கொடுக்கும் படைப்புகளுக்கும் உண்மைக்கும் இசைவில்லாமல் இருப்பதை குறிக்க ஆகுபெயராகி வருவதால், பிதற்றல் என்ற சொல் பொருத்தம்.

Sentient System = புலனுணர்ப் பொறி

Consciousness, Sentience, Intutition முதலிய சொற்கள் இன்னும் கவனிக்கப்பட வேண்டியவை. ஒரு நிரலோ, எந்திரமோ அதன் சுற்றுசூழலை புலன்களின் முலம் தான் உணர முடியும்(வேண்டும்). அப்படி உணர்ந்து அதன் வழி (கொஞ்சம் நம்மைப்போல) சூழலைப் புரிந்து இயங்க வல்லவை புலணுனர்ப் பொறிகள்

Technological Singularity = நுட்ப-அருக்காணி

Singularity என்ற சொல் பல துறைகளில் பல பொருளில் ஆண்டு வரும் சொல். பொருளிலும் வேறுபாடுகள் உண்டென்றாலும் அவற்றுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை அச்சொல் குறிக்கும் நிலை, பொருள், இடம் என எதுவாக இருந்தாலும் அது தனித்த, வேறேங்கும் காணமுடியாத இயல்புகளை கொண்டிருப்பதைச் சுட்டுவதே. ஆகவே அரிய, அருமையான என்ற கருத்தைகொண்டு அருக்காணி (ஒ.நோ. சப்பாணி, உச்சாணி)

Paperclip Maximizer = குண்டூசி மிகுத்தர்

minimum:maximum = குறுமம்:மிகுமம் minimize:maximize = குறுக்கு:மிகுத்து minimizer:maximizer = குறுக்கர்:மிகுத்தர்

Mutual exchange - இருதலை பரிமாற்றம்

ஒருதலைப்பட்சமாக இல்லாமல் இருதலைக்கும் நலமாக